கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு


கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Sep 2023 9:36 PM GMT (Updated: 25 Sep 2023 9:55 PM GMT)

3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது

தஞ்சாவூர்

திருக்காட்டுபள்ளி:

3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை

காவிரி பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கல்லணையில இருந்து காவிரி பாசனத்துக்கு ஜூன் 16-ந் தேதி திறந்து விடப்பட்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜூன் 26-ந் தேதி முறை பாசனம் அமல்படுத்தபட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

முறை பாசன முறை அமல் படுத்தப்பட்டதால் குறுவை பாசன விவசாயிகள் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவும் வெகுவாக குறைந்தது.

தண்ணீர் திறப்பு

கல்லணை கால்வாயில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 22-ந் தேதியில் இருந்து முழுவதுமாக தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் கல்லணை கால்வாய் பாசன பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த குறுவை பயிர்கள் பாதிப்படைந்தன. பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் இல்லாமல் குறுவை பயிர்கள் காய்வதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் 1,412 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் மிகவும் குறைந்த அளவாக 2,402 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்

வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே குறுவைப் பயிர்களை பாதுகாக்க இயலும். தொடர்ந்து வெயில் கொளுத்தி வரும் நிலையில் அதிக அளவில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. பற்றாக்குறையான தண்ணீர் கொண்டு முழுமையான விளைச்சலை பெறுவது கடினமே என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் குறைந்த அளவிலான தண்ணீரை கொண்டு குறுவை பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.


Next Story