பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு


பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

2-ம் போக பாசனத்துக்காக பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்


பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய அணைகள் மூலம் பழனி சுற்றுப்புற பகுதியில் நெல், கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தாகி உள்ளது. இதையடுத்து பழனி, பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் 2-ம் போக நெல் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 2-ம் போக பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தாடாக்குளம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தாடாக்குளம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உதயக்குமார், உதவி பொறியாளர் அருண்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்றனர். முன்னதாக அணை பகுதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

500 ஏக்கர் நிலம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அணையில் இருந்து தாடாக்குளம் கால்வாய் பாசனத்துக்கு நேற்று முதல் வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 நாட்களுக்கு 155.52 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பழனி, பாலசமுத்திரம் பகுதியில் உள்ள 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 65 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 41 அடி வரை தண்ணீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 103 கனஅடியாகவும், வெளியேற்றம் 79 கனஅடியாகவும் உள்ளது என்றனர்.



Next Story