100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்


100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா தரிசனம் நேற்று முதல் தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 2,600 ேபாலீசார் ஈடுபட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா தரிசனம் நேற்று முதல் தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 2,600 ேபாலீசார் ஈடுபட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆடி அமாவாசை திருவிழா

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வருகிற 28-ந் தேதி வருகிறது.

இதையொட்டி நேற்று முதல் 6 நாள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து மலை ஏறிச்சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அடுத்து வரும் நாட்களில் பக்தர்களின் வருகை பெருமளவு அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

அதன்படி தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, தம்பிபட்டி விலக்கு, மாவுத்து உதயகிரிநாதர் கோவில், லிங்கம் கோவில், தாணிப்பாறை அடிவார பகுதிகளில் விருதுநகர் மாவட்ட போலீசார் 1,800 பேரும், தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து கோவில் வரை மதுரை மாவட்ட போலீசார் 800 பேரும், வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

அதேபோல தீயணைப்புத்துறையினர் 140 பேர், சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடை பகுதிகள் மற்றும் மலைப்பாதை, கோவில் வளாகம் என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், டவுன் பஸ்களும் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது.

சிறப்பு பூஜை

இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.


Next Story