நெல்லை சந்திப்பு பஸ்நிலைய வெளிப்பகுதியில் இருந்து டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை
நெல்லை சந்திப்பு பஸ்நிலைய வெளிப்பகுதியில் இருந்து டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அஸ்திவாரம் தோண்டும்போது அதிக அளவில் ஆற்று மணல் வெளிப்பட்டது. இதை எடுத்துச்சென்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு குழு விசாரணை நடைபெற்றுள்ளது.
இதன் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பஸ்நிலைய பணிகளை முடிக்காமல் பஸ்களை உள்ளே இயக்க முடியாத நிலை உள்ளது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இடிப்பதற்கு முன்பு நெல்லை நகர பஸ்களும், ஆம்னி பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டன. மேலும் தென்காசி, முக்கூடல், கடையம், சுரண்டை, பாபநாசம், கேரள மாநிலம் மார்க்கமாக சென்ற பஸ்களும் இங்கு வந்து சென்றன. தற்போது அந்த பஸ்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில வழித்தடங்களுக்கு டவுன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இடவசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவில் ராஜா பில்டிங் சாலை பகுதியில் உள்ள தகரத்தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளே தள்ளி வைக்கும் பணி நடந்தது.
மேலும் இந்த பகுதியில் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக பொக்லைன் உதவியுடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் இங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது பயணிகள் வசதிக்காக இங்கு சில இடங்களில் பஸ்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுவதால் நெல்லை வண்ணார்பேட்டையில் தற்போது ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.