மதுரை அரசு ஆஸ்பத்திரியில் "ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ்"
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே இடத்தில் 23 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே இடத்தில் 23 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மதுரை அரசு ஆஸ்பத்திரி
தென்மாவட்ட மக்களின் முக்கிய மருத்துவமனையாக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே முழு வீச்சில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரப்பை அறுவை சிகிச்சை துறை என 7 உயிர்காக்கும் நவீன பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிகிச்சைகளுக்காக தென் மாவட்ட மக்கள் கூட்டம், கூட்டமாக மதுரைக்கு வந்து செல்கின்றனர்.
இதுபோல், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எலும்பு வங்கி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் நாளுக்கு நாள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அறுவை சிகிச்சை அரங்கம்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே இயங்கி வந்த அறுவை சிகிச்சைக்கூடம் 65 ஆண்டுகள் பழமையானது. மேலும், அங்கு ஒரே நேரத்தில் குறைந்த எண்ணிகையில்தான் அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதி உள்ளது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த புதிய அறுவைச்சிகிச்சை வளாகம் (ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ்) அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக தொடங்கின.
தற்போது அந்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.. கிட்டத்தட்ட 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-
23 அறுவை சிகிச்சை அரங்கங்கள்
புதிதாக கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை வளாகம் தரை தளத்துடன் சேர்த்து 7 தளங்கள் கொண்டது. 23 வகை அறுவை சிகிச்சை அரங்குகள் அமைகிறது. இதற்கான கட்டிட பணிகளுக்காக மட்டும் ரூ.121.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களுக்கும் பல கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கங்கள் மட்டுமின்றி நோயாளிகளின் வசதிக்காக 3 தளங்களில் 247 படுக்கைகள் கொண்டு சிறப்பு வார்டும் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 93 படுக்கைகள் ஐ.சி.யு. வசதி கொண்டவை. எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், 600 பேர் அமரும் கருத்தரங்கு கூடம், சலவைக்கூடம் உள்பட பல்வேறு நவீன வசதிகளும் செய்யப்பட உள்ளன.
ஒவ்வொரு தளமும் தோராயமாக 3 ஆயிரம் சதுர மீட்டர் நீளம் கொண்டது. தரை தளத்தில் இருதயவியல் துறை தொடர்பான சிகிச்சைகளும், ரேடியாலஜி துறையும், முதல், 2, 3-ம் தளங்களில் வார்டும் அமைக்கப்படுகின்றன.. 4, 5-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் அதற்கான ஐ.சி.யு. வார்டுகள் அமைகிறது. இந்த அறுவை சிகிச்சை அரங்கங்கள் அனைத்தும் அதிநவீன முறையில் அமைகின்றன.
டிசம்பரில் முடியும்..
3 இடங்களில் ஸ்டெர்ச்சர்கள் செல்லும் வழிகளும், 5 இடங்களில் லிப்ட் வசதியும் உள்ளது. 4 பக்கமும் வாகனங்கள், நோயாளிகள் வந்து செல்லும் வகையில் நுழைவு வாசல் உள்ளது. அனைத்து தளங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்று விடும். அந்த அளவிற்கு பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.