ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் நிலைக்கு மாற்ற முடியாது எனவும் கருத்து: குடிநீர் இணைப்புக்கான டெண்டர் விடும் அதிகாரம் யாருக்கு?- வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குடிநீர் இணைப்புக்கான டெண்டர் விடும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை, முக்கியத்துவம் கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
பஞ்சாயத்து தலைவருக்கு..
அனைத்து கிராம ஊராட்சித்தலைவர்கள் நலச்சங்க தலைவர் முனியாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியாக சுத்தமான குடிநீர் வசதி அளிக்கும், 'ஹர்கர் ஜல்' என்ற திட்டத்தை, மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது. இந்த நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க டெண்டர் விடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி சிவகங்கை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதமாகும். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, டெண்டர் விடும் அதிகாரத்தை பஞ்சாயத்து தலைவருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டம்
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒவ்வொரு குடிமகனுக்கும், குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை நோடல் அமைப்பு மூலம் வட்டார அளவில் செயல்படுத்துகிறோம். ஏற்கனவே இது போன்ற ஒரு வழக்கில் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு செல்லுபடியாகும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சங்கத்தின் சார்பில் இது போன்ற வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதியும் உள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதிட்டார்.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் முக்கியமான நோக்கமே கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக அதிகாரம் வழங்குவது தான். மேலும், கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவது, கிராம ஊராட்சியின் அடிப்படை உரிமை மற்றும் கடமை ஆகும். ஆனால் டெண்டர் அதிகார அறிவிப்பானது கிராம ஊராட்சிக்கான அதிகாரத்தை பறிக்கும் செயலாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தலைமை நீதிபதி அமர்வு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994-ன் படி, குடிநீர் தொடர்பான பணிகளை, உள்ளாட்சி அமைப்புகள் தான் மேற்கொள்ள வேண்டும் என, சந்தேகத்திற்கு இடமின்றி கூறப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளது. எனவே பஞ்சாயத்து தலைவர்களை புறக்கணிக்க முடியாது என இந்த கோர்ட்டு கருதுகிறது. கிராம ஊராட்சி தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் நிலைக்கு மாற்ற முடியாது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, கிராம சுயராஜ்யம் வேண்டும் என கனவு கண்டார். இந்தியாவில் கூட்டாட்சி முறை மற்றும் அதிகார பகிர்வை கோரும் மாநில கட்சிகள், மாநில தலைநகரங்களில் அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, வழக்கின் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் முன் பட்டியலிட உத்தரவிட்டார்.