குரோம்பேட்டையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல் - நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்


குரோம்பேட்டையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல் - நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x

குரோம்பேட்டையில் வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்து திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை இந்திரா நகரில் உள்ள பெரியார் தெரு, தண்டுமாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வீரராகவ பெருமாள் கோவில் ஏரியை சுற்றி சுமார் 314 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு நேற்று காலை நோட்டீஸ் வழங்க வந்தனர்.

ஆனால் 50 வருடங்களாக வசித்து வரும் சூழ்நிலையில் ஆக்கிரமிப்பு என கூறி தங்கள் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி பொதுமக்கள், நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளை வழி மறித்து துர்கா நகர் மெயின் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நோட்டீஸ் வழங்க முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் வழங்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.


Next Story