மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு


மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Sept 2023 3:45 AM IST (Updated: 11 Sept 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தின் ஓரத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 மீன் கடைகள் உள்ளன. தற்போது பஸ் நிலையத்தை நவீனப்படுத்துவதற்காக அங்குள்ள கழிப்பறை, கடைகள் மற்றும் நிழற்கூரை அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி, பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் மீன் கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் நேற்று பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அங்கிருந்த வியாபாரிகளிடம் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி கடைகளை அப்புறப்படுத்த கூறினால் எப்படி என்று கேள்வி எழுப்பியதுடன், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாரிகள் நாளை (இன்று) பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே உடனடியாக கடைகளை அகற்ற வேண்டும் என்றும், மீன் கடைகளுக்கு மாற்று இடம் தருவதாகவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மீன் கடை வியாபாரிகள், தங்களது கடைகளை தாங்களாக அப்புறப்படுத்திக்கொள்வதாக கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சின்னாளப்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story