நாட்டு காளையை விற்க எதிர்ப்பு
பொள்ளாச்சி சந்தையில் நாட்டு காளையை விற்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டு காளையை விற்க எதிர்ப்பு
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து கேரளாவுக்கு பெரும்பாலும் இறைச்சி தேவைக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டுரக காளை மாடு, சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த இந்து அமைப்பினர் சந்தைக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனே பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும் நாட்டு மாட்டின் உரிமையாளரும் வரவழைக்கப்பட்டார். அங்கு திரண்டு இருந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தடுத்து நிறுத்த வேண்டும்
போலீசாரின் விசாரணையில் தேவராயபுரத்தை சேர்ந்த தீபா என்பவரிடம் பொன்மலைசாமி என்பவர் நாட்டு காளை மாட்டை இனப்பெருக்கத்திற்கு தேவைப்படுவதாக கூறி வாங்கியதும், அதை அவர் மாட்டு சந்தையில் விற்க கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாட்டு மாடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறியதாவது:-
அழியும் நிலையில் உள்ள நாட்டு மாடுகளை போலி புரோக்கர்கள் மூலம் வாங்கி அடிமாடாக விற்க கொண்டு வருகின்றனர். இதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் மாடுகளை கொண்டு செல்லும் லாரிகள் விதிமுறைகளை மீறி நீளமாக அமைக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.








