பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு


பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
x

ராமேசுவரம் கரையூர் பள்ளி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம் கரையூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலெக்டரிடம் திரளாக வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு கரையூர் மீனவ கிராமத்தில் சுமார் 200-க்கும் அதிகமான வீடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்தை ஒட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதில், தெற்கு கரையூர், கரையூர், மருதுபாண்டியர் நகர், சேராங்கோட்டை, சேதுபதி நகர், பூலித்தேவன்நகர், கடற்கரை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த சுமார் 400-க்கும் அதிகமான குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு கரையூர் பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கும் நடுவிலும் மேற்படி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகாமையிலும் தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்று அமைக்கப்படும் செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே எங்களின் நலன்கருதி செல்போன் கோபுரம் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story