ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓ பன்னீர் செல்வம் விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர். கிரிக்கெட் போட்டிக்கு இடையே, சபரீசனும் - ஓ பன்னீர் செல்வமும் சந்தித்து பேசினர். இது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இந்த சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி பேசினார். தற்போது பூனைக் குட்டி வெளியே வந்த கதையாக மக்களுக்கு சபரீசனுடனான சந்திப்பின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை'' என்றார்.