பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் கலெக்டர் சாந்தி உத்தரவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை சேகரித்து பயோடீசலாக மாற்ற கடை உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளுக்கு காவல் துறையினருடன் இணைந்து அபராதம் விதிக்க வேண்டும்.
அயோடின் உப்பு
அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் உப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வேணுகோபால், வணிகர் சங்க நிர்வாகி மயில்வாகனன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






