நகைக்கான தொகை, இழப்பீட்டை நிதி நிறுவனம் வழங்க உத்தரவு
நகைக்கான தொகை, இழப்பீட்டை நிதி நிறுவனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமரைக்குளம்:
அரியலூர் அரசு நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 68). இவர் அரசு சிமெண்டு ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் அரியலூரில் இயங்கி வரும் இந்தியா இன்போ லைன் என்ற நிதி நிறுவனத்தில், தனக்கு சொந்தமான 240 கிராம் தங்க நகைகளை நான்கு தவணைகளாக அடகு வைத்து ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனம் வழங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்துமாறும், இல்லாவிட்டால் நகை ஏலம் விடப்படும் என்றும் செல்வராஜுக்கு அறிவிப்பு அனுப்பியிருந்தது. பின்னர் ஏலம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையான அறிவிப்பை அனுப்பாமல், அவரது நகைகள் ஏலத்தில் விடப்பட்டன.
தனது நகைகள் ஏலம் விடப்பட்டது என்பதை அறிந்த செல்வராஜ், நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது எந்த தேதியில், எவ்வளவு தொகைக்கு நகைகள் ஏலம் விடப்பட்டது, யாரால் ஏலத்தில் நகைகள் எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் எதனையும் நிதி நிறுவனம் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தனது நகைகளை திரும்ப பெற்றுத்தருமாறும், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடு வழங்குமாறும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருதரப்பிலும் சாட்சியங்களும், ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல் ஏலம் விட்டது சேவை குறைபாடு. எனவே அவர் அடமானம் வைத்த 240 கிராம் தங்க நகைகளுக்கு இன்றைய சந்தை மதிப்பு தொகையை நிதி நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும். அந்த பணத்தில் இருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன் மற்றும் சாதாரண வட்டியை கழித்துக்கொள்ள வேண்டும். சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டுள்ளது.