சீரமைக்கப்பட்ட தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு
நவஇந்தியா பகுதியில் சீரமைக்கப்பட்ட தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு, மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
கோவை
நவஇந்தியா பகுதியில் சீரமைக்கப்பட்ட தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு, மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
சாலையின் தரம் ஆய்வு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை எஸ்-பெண்ட் சந்திப்பு முதல் கொடிசியா வரை உள்ள சாலையை ரூ.3 கோடியே 25 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
மேலும் அவர், அவினாசி ரோடு நவ இந்தியா முதல் இந்துஸ்தான் கல்லூரி வரை ரூ.98 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட தார்சாலையை ஆய்வு செய்தார். அப்போது தார்சாலையின் தரம் குறித்து அறிய மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்ப பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தார்சாலையின் மாதிரியை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
குடிநீர் வினியோகம்
இதற்கிடையில் கோவையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடு, வீடாக சென்று தேங்கிய நீரில் அபேட் என்ற மருந்து ஊற்றப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவரணம்பட்டி, சிவானந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.
மேலும் சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வேலவன் நகரில் இணைப்பு சாலை அமைக்க சாத்தியகூறுகள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.