இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 65). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார்.கடந்த மாதம் 30-ந்தேதி மகேந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு திருமாந்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 9-ந்தேதி திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில், மகேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதில் அவரது கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேற்கண்ட விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.