ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மாநில கல்வி கொள்கை குழு அமைப்பு


ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மாநில கல்வி கொள்கை குழு அமைப்பு
x

மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான அரசாணை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story