காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது - ஓ.எஸ்.மணி்யன்


காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது - ஓ.எஸ்.மணி்யன்
x
தினத்தந்தி 23 July 2023 12:45 AM IST (Updated: 23 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்

காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இது குறித்து அவர் நேற்று நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருகும் நெற்பயிர்கள்

கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். அதிகமான அளவில் நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி மிக மோசமான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விட்டபோதே, பருவ மழை எப்போது தொடங்கும் என்பதை அறிந்து திறந்திருக்க வேண்டும். சாதனை செய்வதாக கருதி ஜூன் 12-ந் தேதி தண்ணீரை திறந்து விட்டு,விட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை தி.மு.க. அரசு அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு

தற்போது தண்ணீர் வரத்து இல்லாததால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு காப்பீடு கூட பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே குறுவை பாதிப்பை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்திடம் இருந்து காவிரி நீரை பெற இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெங்களூருவுக்கு சென்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால் காவிரி நீரை திறந்துவிட அந்த மாநில முதல்-மந்திரியை அணுகவில்லை. இதில் இருந்து தி.மு.க. அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவது தெரியவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story