குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்கப்பட்டால் யாரும் பகிர வேண்டாம் என்று கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.1,000 மகளிரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த உரிமைத்தொகையை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத்தொகை ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைவதற்கு ஓ.டி.பி. எண் ஏதும் நடைமுறையில் இல்லை. இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
புகாா் தெரிவிக்கலாம்
மேலும் ஓ.டி.பி. எண் பகிர எவரேனும் தொலைபேசியில் கேட்டால் அவரது செல்போன் எண்ணை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி விவரத்தை தெரிந்துகொள்ளலாம். மேலும் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.