ஓ.டி.பி. மூலம் பணம் இழந்தால் 4 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக தடுக்கலாம்

ஓ.டி.பி. மூலம் பணம் இழந்தால் 4 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக தடுக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
கரூர்,
279 செல்போன்கள்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்ட சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 125 செல்போன்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக ஏமாற்றிய ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 399 ஆகியவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி, பணம் மற்றும் செல்போன்களை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
கரூர் மாவட்ட காவல்துறையில் சைபர் கிரைம் போலீசாரின் திறமையான செயல்பாட்டின் அடிப்படையில், இந்த வருடத்தில் 3 முறை தொலைந்து போன செல்போன்கள், பணம் ஆகியவை பொதுமக்களுக்கு மீட்டுதரப்பட்டுள்ளன. கிட்டதட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 279 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திரும்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மீட்டு தரப்பட்டுள்ளது. 2½ பவுன் நகை மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
உதவி எண் 1930
பொதுமக்கள் தவறுதலாக செல்போன் மூலம் அனுப்பக்கூடிய பணம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓ.டி.பி. மூலமாகவோ, வேறுவிதமான பரிவர்த்தனை மூலமாகவோ பணத்தை இழக்க நேரிட்டால் 4 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால், யாருக்கு பணம் சென்று சேர்கிறதோ அதை உடனடியாக தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மீட்டுத்தர ஏதுவாக இருக்கும்.
ஆகவே 1930 என்ற உதவி எண்ணை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து வைத்துக்கொண்டு, முறையான நேரத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும். கிரிப்டோ கரன்சி சம்பந்தமாக டி.ஜி.பி. விரிவாக விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். அதை தெரிந்து கொண்டு அவரது அறிவுரையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராதாகிருஷ்ணன், கண்ணன், கீதாஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.