தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி


தூய ஜெபமாலை அன்னை ஆலய  தேர்பவனி
x

தூய ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவினை கடந்த 7-ந் தேதி மதுரை உயர்மறை மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலர் தாமஸ் வெனிஸ் அடிகளார், தூய ஜெபமாலை அன்னை உருவம் பொறித்த கொடியினை ஏற்றி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவினை முன்னிட்டு ஆலய வளாகம் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினசரி மாலையில் நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்பவனி நேற்று நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி சிவகாசி சாலை, ஆனைக்குழாய், டி.டி.கே. ரோடு வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தினை வந்தடைந்தது. முன்னதாக விருதுநகர் வட்டார அதிபரும், தூய இன்னாசியார் ஆலய பங்குத்தந்தையுமான அருள்ராயன் தலைமையில் திருவிழா திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. தேர்பவனியில் விருதுநகர் நகர் பகுதி, நிறைவாழ்வு நகர், பாண்டியன் நகர், சூலக்கரை, வெள்ளூர், மூளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவிழா நவநாள் திருப்பலியில் மதுரை அலெக்ஸ் ஞானராஜ் அடிகளார், அடைக்கலராஜா அடிகளார், பீட்டர் அடிகளார், தேனி அமலஞானபிரபு அடிகளார், வடபட்டி சந்திரா நேவிஸ் அடிகளார், மேலூர் அந்தோணி பாக்கியம் அடிகளார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நிறைவாழ்வு நகர் பங்குத்தந்தை அந்தோனிசாமி தலைமையில் நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி தலைமையில் பங்கு அருட்பணி பேரவை, நிதிக்குழு, திருச்சிலுவை அருட் சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.



Next Story