"நமது வழி தனி வழி" தேனியில் ரஜினி ஸ்டைலில் பேசிய எடப்பாடி பழனிசாமி
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றி , நமது வழி தனி வழி என்பதை நிரூபிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி
தேனி மாவட்டம் கம்பத்தில், கட்சி நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேனிக்கு கார் மூலம் இன்று வருகை தந்தார்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தருவது இதுவே முதல் முறை ஆகும்.
அதற்காக மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்டிகே ஜக்கையா தலைமையில் மிகப்பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அதன்படி திண்டுக்கல்- வத்தலகுண்டு வழியாக தேனி புறவழிச்சாலையில் எடப்பாடி வந்த போது அவரை அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து தேனி அன்னஞ்சி விளக்கு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடி பூரண கும்பம் மரியாதை உடன் மலர்கள் தூவியும், செண்டைமேளம், தப்பாட்டம், டிரம் செட், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவற்றை முழங்கச் செய்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றனர்.
இதனையடுத்து கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணத்தை நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி, அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மேடையில் ஏறிய எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் வாள் கொடுத்து வரவேற்றார்.
இதனை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது வழி தனி வழி என்பதை நிரூபித்து காட்டுவோம் என பேசி கட்சியினரை உற்சாகப்படுத்தியதோடு தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பிறகு அங்கிருந்து கிளம்பி கம்பத்தில் நடைபெற்ற மற்றொரு கட்சி நிர்வாகியின் கல்யாண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு புறப்பட்டு சென்றார்.
கம்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்து மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை ஒட்டி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.