மாவட்டத்தில் 348 தொடக்கப்பள்ளிகளில்17,444 மாணவர்கள் பயன்பெறுவார்கள்; ராதாபுரத்தில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து சபாநாயகர் அப்பாவு பேச்சு
முதல்-அமைச்சரின் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை ராதாபுரத்தில் தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 348 பள்ளிகளில் 17,444 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
ராதாபுரம்:
முதல்-அமைச்சரின் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை ராதாபுரத்தில் தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு, இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 348 பள்ளிகளில் 17,444 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
காலை உணவு வழங்கும் திட்டம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில், சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் சபாநாயகரும், கலெக்டரும் மாணவ-மாணவிகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு தனது அருகில் இருந்த மாணவிக்கு காலை உணவை வாஞ்சையுடன் ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
17,444 மாணவர்கள் பயன்
காலை உணவு குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்தோடு, இரவு உணவுக்கு பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. காலை உணவு சாப்பிடாமல் வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் சோர்வடைகின்றனர். இதனை போக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15¾ லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 40 பள்ளிகளில் தொடங்கப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தற்போது மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் செயல்படும் 286 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்கள், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,894 மாணவர்கள், நகர்புற பகுதிகளில் செயல்படும் 19 பள்ளிகளில் பயிலும் 1,162 மாணவர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், ரூபா, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம், ராதாபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லை மாநகராட்சி 16-வது வார்டில் உள்ள லாலுகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மேயர் சரவணன் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.
பின்னர் பழையபேட்டை சந்தனமாரியம்மன் கோவில் அருகே கழிவுநீரோடையை பார்வையிட்டு ஓடையினை சீரமைக்கவும், தெருவிளக்கு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை பார்வையிட்டு அந்த மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உதவி செயற்பொறியாளர்கள் பைஜூ, பேரின்பம், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.