ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறிது நேரம் மறியல் செய்தனர்.
கூடலூர்
ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறிது நேரம் மறியல் செய்தனர்.
கண்காணிப்பு கோபுரம்
கூடலூரை தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் பேரூராட்சி முழுவதும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் 5 இடங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அறிய கண்காணிப்பு கோபுரம் மற்றும் முகாம் அமைக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையொட்டி கடந்த காலங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதில் காந்திநகர் கிராமத்தை ஒட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த காலங்களில் பணி தொடங்க உள்ள சூழலில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் உதவியுடன் தொடங்கப்பட்டது.
இதை அறிந்த கிராம மக்கள் விவசாய நிலத்தில் பணி தொடங்கப்படுகிறது. வனத்துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கோபுரம் அமைக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வனத்துறையினர் அமைக்கும் கோபுரம் எந்த வகை நிலம் என்று தெரிவித்த பிறகு கட்டுமான பணிகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. மேலும் மரியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.








