அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல்
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி வடக்கிபாளையம், நடுப்புணி, கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டன்புதூர் சோதனை சாவடிகளில் இரு குழுவாக பிரிந்து வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் கற்களை அளவுக்கு அதிகமாக விதிமுறையை மீறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து விதிமுறைகளை மீறியதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு விதிமுறையை மீறி கூடுதலாக கனிமவளங்களை கடத்தி செல்வதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகார்களின் பேரில் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகமாக பாரம் ஏற்றி சென்றதாக 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 35 டன் எற்ற கூடிய ஒரு லாரியில் மட்டும் 75 டன் வரை அதிகமாக ஏற்றி சென்று உள்ளனர். இதேபோன்று மற்ற லாரிகளிலும் 10 முதல் 20 டன் வரை கூடுதலாக ஏற்றி சென்றதும் சோதனையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.5 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.