பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்


பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளர்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

ரூ.1 லட்சத்துக்கு மாதந்தோறும் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக அறிவித்து பல கோடி ரூபாய் சுருட்டி தலைமறைவான சங்கராபுரம் நிதி நிறுவன உரிமையாளரை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில்ஷேக் மகன் சமீர் அகமது(வயது 26). இவர் மூரார்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந் தோறும் ரூ.12 ஆயிரம் வட்டி தருவதாக கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்.

இதை நம்பி மூரார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். இவர்களுக்கு கூறியபடி சமீர்அகமது வட்டி பணத்தை கொடுத்து வந்தார்.

இதை நம்பி மேலும் பலர் அவரிடம் பணத்தை முதலீடு செய்தனர். பணம் குவிய தொடங்கியதால் சமீர்அகமது தனது கிளை அலுவலகங்களை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தினார்.

திடீர் தலைமறைவு

இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளாக முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு வட்டி பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலீடு செய்தவர்கள் தங்களின் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்த நிலையில் சமீர் அகமது திடீரென தலைமறைவானார்.

வாடிக்கையாளர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் சென்னை சோழிங்கனூரில் இருப்பது தொியவந்தது. இதையடுத்து சில வாடிக்கையாளர்கள் சோழிங்கனூர் சென்று சமீர் அகமதுவை பிடித்து காரில் மூரார்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.

பணம் கேட்டு தகராறு

இதுபற்றிய தகவல் அறிந்து அவரிடம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணிபுரிந்த முகவர்கள் அங்கே திரண்டு வந்து சமீர் அகமதுவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். ஆத்திரம் அடைந்து சிலர் அவரை தாக்கவும் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இது குறித்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சமீர் அகமதுவை மீட்டு சங்கராபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கோடிக்கணக்கில்...

விசாரணையில் சமீர் அகமது பல்வேறு இடங்களில் நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் தொடங்கி, அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோடி செய்ததாக தெரிகிறது. இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குவியும் புகார்கள்

இந்நிலையில் சமீர் அகமதுவிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். இதில் சங்கராபுரம் அருகே உள்ள பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிவராஜ்(வயது 28) மற்றும் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 6 பேர் தங்களிடம் சமீர் அகமது ரூ.5 கோடியே 1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்தனா்.

அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தவிர சங்கராபுரம் மற்றும் மூரார்பாளையம் பகுதியை சார்ந்த ஆண், பெண் வாடிக்கையாளர்கள் 30 பேர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story