300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
கிருஷ்ணகிரியை அருகே தானம்பட்டி கிராமத்தில் 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரியை அருகே தானம்பட்டி கிராமத்தில் 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தானம்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, எலத்தகிரி, பர்கூர், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே காளைகளை வாகனங்களில் கொண்டு வந்தனர்.
.பின்னர், போலீஸ் பாதுகாப்புடனும், கால்நடை டாக்டர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். பின்னர் ஒவ்வொரு காளைகளையும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட விட்டு, அந்த காளைகள் அந்த தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கிறது என ஸ்டாம் வாட்ச் மூலம் கணக்கெடுத்தனர். அதன்படி 300 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
பரிசுகள்
அவ்வாறு ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.40 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.30 ஆயிரம் என மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் 52-ம் இடம் முதல் 101-ம் இடம் வரை பெற்ற மற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த எருது விடும் விழாவை தானம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.