விவசாயம் செழிக்க வேண்டி எருது கட்டு விழா


விவசாயம் செழிக்க வேண்டி எருது கட்டு விழா
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி அருகே எருதுகட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி

விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி அருகே எருதுகட்டு விழா நடைபெற்றது.

புரவி எடுப்பு விழா

சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் விளைச்சல் அமோகமாக இருப்பதற்காக ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாதம் புரவி எடுப்பு விழாவை தொடர்ந்து சந்திவீரன் கூடத்தில் உள்ள வீரையா கோவிலில் எருதுகட்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல இந்தாண்டும் புரட்டாசி மாத புரவி எடுப்புவிழாவை தொடர்ந்து வீரையா கோவில் முன்பு எருது கட்டு விழா நடைபெற்றது. முன்னதாக சேவக பெருமாள் அய்யனார் கோவில் காளைக்கு வீரையா கோவில் முன்பு வழிபாடு செய்யப்பட்டது.

எருதுகட்டு

பின்னர் எருதுகட்டுக்காக தேர்வு செய்த காளையை வீரையா கோவிலில் இருந்து கயிற்றுடன் நான்கு கால்களிலும் வெங்கல சலங்கைகள் கட்டப்பட்டு அவிழ்த்து விடப்படும். காளை விரட்டும் பொழுது கால்களில் கட்டப்பட்டு உள்ள சலங்கைகளில் இருந்து அவிழ்ந்து விழும் சலங்கை மணிகளை கணக்கிட்டு இந்த ஆண்டு விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

முன்னதாக வீரையா கோவிலில் சந்தி அம்பலம் குடும்பத்தார்கள் சார்பில் காளையை தேர்வு செய்து வீரையா கோவிலில் கட்டி வைக்கப்பட்டது.

அதிக சாகுபடி

தொடர்ந்து கூவாண கண்மாயிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கிராமத்தார்கள் சார்பில் காளைக்கு தெளிக்கப்பட்டு காளை கயிற்றுடன் அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளையை சீரணி அரங்கம் வரை இளைஞர்கள் விரட்டி சென்றனர். அவ்வாறு செல்லும் பொழுது சலங்கையில் இருந்து நான்கு மணிகள் அவிழ்ந்து விழுந்தது. இதனால் இந்த ஆண்டு விவசாயத்தில் அதிக சாகுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை சந்தி அம்பலம் குடும்பத்தார்கள் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள், சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் வீரையா கோவில் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story