சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் சேதமான பி.ஏ.பி. கால்வாய் கரைகள்
பி.ஏ.பி. கால்வாயின் இரு புறங்களிலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் கால்வாய் கரைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி. கால்வாயின் இரு புறங்களிலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் கால்வாய் கரைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதான கால்வாய்
பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. பிரதான கால்வாய் 126 கிலோ மீட்டர் நீளம் உடையது. இதில் பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் பி.ஏ.பி. பிரதான கால்வாய் 30 கிலோமீட்டர் நீளம் உடையது.
இந்த பிரதான கால்வாய் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
சீரமைக்க வேண்டும்
பூசாரிபட்டி அருகே புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் 2-ம் மண்டல பாசனத்தில் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவசாய நிலங்களும் 4-ம் மண்டலத்தில் 7 ஆயிரத்து 319 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. புதுப்பாளையம் கிளை கால்வாய் வல்லகுண்டாபுரம் மேற்குப் பகிர்மான கால்வாயின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. சீமக்கருமேல மரங்களின் வேர்கள் கால்வாயில் ஊடுருவி பல இடங்களில் கரைகள் உடைந்து காணப்படுகிறது.
நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. சீமை கருவேல மரங்களால் பி.ஏ.பி. கால்வாய்க்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பி.ஏ.பி. கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.