தண்ணீர் இன்றி வாடும் நெற்பயிர்கள்


தண்ணீர் இன்றி வாடும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 22 Aug 2023 8:30 PM GMT (Updated: 22 Aug 2023 8:30 PM GMT)

கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், வயல்களில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் போதிய மழை பெய்யாததால், வயல்களில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை இல்லை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்து வருகிறது. இதனால் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி, இஞ்சி, குறுமிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது.

மேலும் ஆண்டுதோறும் பருவமழையை கருத்தில் கொண்டு கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயமும் நடந்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இதை நம்பி நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த ஆண்டு தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வந்தது. மழை தொடர்ந்து பெய்யும் என்ற நம்பிக்கையில், வழக்கம் போல கூடலூர் பகுதி விவசாயிகள் தங்களது வயல்களில் உழவு பணி மேற்கொண்டனர்.

வாடும் நெற்பயிர்கள்

பின்னர் நெல் நாற்றுகளை நடவு செய்தனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக இதுவரை தொடர்ந்து போதிய அளவு மழை பெய்ய வில்லை. இதனால் நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளன. போதுமான தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் வாடி வருகின்றன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல காரணங்களால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story