திருந்திய நெல் சாகுபடிக்கு80 சதவீதம் இலக்கு நிர்ணயம்
நஞ்சை சம்பா சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
முத்தூர்,
முத்தூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று வேளாண்மைத்துறை அறிவித்து உள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் மஞ்சள், வாழை, கரும்பு, நெல், நிலக்கடலை, சூரியகாந்தி, எள், மா, கொய்யா சப்போட்டா, முருங்கை, நெல்லி மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் உட்பட பல்வேறு வேளாண்மை சாகுபடி செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முத்தூர் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த 19-ந் தேதி முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட உள்ளன.
விதை நெல்கள்
இதன்படி இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியில் முதல் கட்டமாக நெல் நாற்றுக்கள் விடுவதற்காக ஐ.ஆர்.20, கோ 41, கோ 43, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக சான்று பெற்ற விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து டிராக்டர் மூலம் சேற்று உழவு செய்து ஆட்கள் மூலம் நெல் நாற்று நடவு பணிகளை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழ்நிலையில் பவானிசாகர் அணை தண்ணீருடன் மழை பெய்தால் மட்டுமே நெல் சாகுபடி பணியை உடனடியாக தொடங்க முடியும் என்று விவசாயிகள் மழையை எதிர்பார்த்து வருண பகவானை வேண்டி காத்து கொண்டு உள்ளனர்.
இதுபற்றி வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன கிராம பகுதிகளில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நஞ்சை சம்பா நெல் சாகுபடி தொடங்கப்பட உள்ளன.
திருந்திய நெல் சாகுபடி
இந்த நிலையில் இப்பகுதிகளில் தற்போது விதை நெல் விடும் பணி தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் குறைந்த முதலீட்டில் அதிக மகசூல், கூடுதல் வருமானம் தரும் ஒற்றை நாற்று எனும் திருந்திய நெல் சாகுபடி செய்து கூடுதல் பலன் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இப்பகுதிகளில் இந்த ஆண்டு திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி இப்பகுதி விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடியின் நன்மைகள், வேளாண் தொழில் நுட்பங்கள், நெல் நாற்றங்கால் அமைத்தல், விதை நெல் விடுதல், நெல் நாற்று நடவு பணிகள், அடி உரம், மேல் உரம் இடுதல், திரவை எந்திரம் மூலம் களைக்கொல்லி மேலாண்மை கடைப்பிடித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, நீர் பாய்ச்சுதல் மற்றும் அறுவடை பணிகள் ஆகியவை செய்யப்படும் வழிமுறைகள் பற்றி வேளாண்மைத்துறை மூலம் வயல்வெளி கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் குழுவினர் மூலம் நேரில் பல்வேறு விரிவான ஆலோசனைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளன. இவைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். எனவே இப்பகுதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று பலன் பெற முன்வர வேண்டும்.
80 சதவீதம் இலக்கு
இந்த ஆண்டு இப்பகுதிகளில் நஞ்சை சம்பா மொத்த நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடிக்கு 80 சதவீதம் இலக்கு தவிர மீதம் உள்ள 20 சதவீதம் அளவுகளில் சாதாரண முறையிலான நெல் நாற்று நடவு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.