குமரியில் 5 ஆயிரம் ஹெக்டராக குறைந்த நெல் சாகுபடி


குமரியில் 5 ஆயிரம் ஹெக்டராக குறைந்த நெல் சாகுபடி
x

குமரியில் 5 ஆயிரம் ஹெக்டராக குறைந்த நெல் சாகுபடி

கன்னியாகுமரி

இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் பல தனிச்சிறப்புகளை கொண்டது. இங்கு இரு பருவ காலத்திலும் மழை பெய்வதால் ஆண்டு முழுவதும் நெல்பயிர்கள், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்டவை செழித்து வளரும் செம்மை மிக்க மாவட்டமாகும்.

நெல் விவசாயம் சுருங்கியது

இங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என்பதால் இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் எப்போதும் நிறைந்து காணப்படும். உணவு, பாதுகாப்பு மற்றும் புகலிடம் தேடி குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்லும்.

ஏராளமான வனங்கள், கடற்கரைகள் இருப்பது குமரி மாவட்டம் தனித்துவமும், செழுமையும் உலகிற்கு எடுத்துரைக்கும். எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியபடி காட்சி அளித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது விவசாய சாகுபடி ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருவது தான். வீட்டுமனைகள் அதிகரித்ததன் காரணமாக நெல் வயல்கள் அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2005-ம் ஆண்டில் நெல் சாகுபடி நிலப்பரப்பு 20 ஆயிரம் ஹெக்டராக இருந்த நிலையில் தற்போது வெறும் 5 ஆயிரம் ஹெக்டருக்குள் சுருங்கி போய் விட்டது.

அழிவின் விளிம்பில்...

மக்கள் தொகை அதிகரிப்பு, பல்வேறு சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் வயல்கள் வேகமாக வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. மேலும் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையேயான சுசீந்திரம் பகுதியில் புறவழிச்சாலை வந்ததால் அந்த பகுதியில் ஏராளமான வயல்கள் அழிக்கப்பட்டன. இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய நிலம், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக உருமாறிக்கொண்டிருக்கின்றன.

எனவே விவசாயத்தை காப்பாற்றவும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

அரசு அதிகாரிகள் விதி மீறல்

இதுகுறித்து மாவட்ட நீர்ப்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் நெல்வயல்கள் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம் குறைந்து வருகிறது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுபவர்கள் முறையாக அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. அவற்றை அரசு அதிகாாிகளும் மீறி செயல்படுகிறார்கள். அவ்வாறு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போது அங்குள்ள நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து அதனை வீட்டு மனைகளுடன் இணைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் விளைநிலங்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தி அதனை முறையாக கடைபிடித்து வருகிறார்கள். அதேபோல தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வந்தால் இன்னும் சில ஆண்டுகளில் குமரி மாவட்டம் விவசாயம் செய்ய தகுதியற்ற மாவட்டமாக மாறி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் விவசாயம் அதிகரிப்பு

குமரி மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் செண்பகசேகர பிள்ளை கூறியதாவது:-

அரசு சட்டதிட்டத்தின்படி முறையான அனுமதி இல்லாமல் சில வீட்டுமனைகள் மாவட்டத்தில் உள்ளன. கேரளாவில் விளைநிலங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டில் கேரளாவில் மட்டும் மொத்தம் 2½ லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை புதிதாக விவசாய நிலங்களாக மாற்றி சாதனை படைத்துள்ளனர்.

அங்கு 15 காய்கறி வகைகளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனால் கேரளாவில் விவசாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் எஞ்சிய நெல் வயல்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க இருக்கும் சட்டங்களை கடுமையாக்கி அதனை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story