நெல், மணிலா, உளுந்து விதைகளை மானிய விலையில் பெறலாம்
ஆடிப்பட்டத்தில் விதைக்க நெல், மணிலா, உளுந்து விதைகள் மானிய விலையில் விரிவாக்க மையங்களில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்டராம்பட்டு,
ஆடிப்பட்டத்தில் விதைக்க நெல், மணிலா, உளுந்து விதைகள் மானிய விலையில் விரிவாக்க மையங்களில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல் விதைகள்
திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விதைத்து சாகுபடியை தொடங்குவார்கள். ஆடி மாதம் பிறந்து விட்டதால் வயலை உழவு செய்து விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தண்டராம்பட்டு, வாணாபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடி பட்ட தேவைக்கான நெல், நிலக்கடலை, உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லில் வெள்ளை பொன்னி, பாபட்லா, ஏ.டி.டீ.39 மற்றும் வி.ஜி.டி1 மத்திய கால நெல் ரகங்களும், ஏ.டி.டீ.37, சி.ஓ.51 ஆகிய குறுகிய கால ரகங்கள் இருபடபு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நிலக்கடலையில் டி.எம்.வி.8, தரணி ஆகிய ரகங்களும் உளுந்து பயிரில் வி.பி.என். 8,10,11 ஆகிய ரகங்களும் மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
50 சதவீத மானியம்
தரமான தானியம் உற்பத்தி செய்ய நுண்ணூட்ட சத்து உரங்கள், உயிர் உரங்கள், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பைரில்லம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் ஜிங்க் சல்பேட் நுண்ணுட்டஉரம் வழங்கப்படும். மானிய விலையில் இடுபொருட்கள் வாங்க வரும் விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராம் பிரபு தெரிவித்துள்ளார்.