திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்


திட்டக்குடி அருகே  நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி  லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
x

திட்டக்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் திடீரென மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலயைம் இயங்கி வருகிறது. தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், இங்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகளவில் இருந்தது.

இங்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்து, அதனடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை எடைபோட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் நெல் மூட்டைகளுடன் காத்திருந்து வருகிறார்கள். சுமார் ஆயிரம் மூட்டைகள் வரைக்கும் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கிறது.

திடீரென மூடினர்

இதற்கிடையே திடீரென நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதாக அங்கு சிறிய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்ததுடன், கொள்முதல் நிலையமும் மூடிக்கிடந்தது.நேற்று, இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். குறிப்பாக நெல் மூட்டைகளுடன் பல நாட்களாக காத்திருந்த விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்கள்.

லாரி சிறைபிடிப்பு

அப்போது, நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன் லாரி ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதை பார்த்து ஆத்திரமடைந்த விவசாயிகள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடிவிட்டனர். உடனடியாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கு அதிகாரிகள் யாரும் வாராததால், வேறு வழியின்றி தங்களது போராட்டத்தை விலக்கி கொண்டனர். மேலும் நெல் மூட்டைகளை எடுத்து வந்த விவசாயிகள் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே சோகத்துடன் காத்திருந்தனர்.


Next Story