நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்
நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
அணைக்கட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி, தலைமை இடத்து துணை தாசில்தார் குமார், நில அளவையர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தக்காளி அதிக விளைச்சல் ஆகும்போது அதை குளிர்சாதன கிடக்குகளில் வைக்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தூர் ஏரியில் உள்ள மதகு உடையும் நிலையில் உள்ளது. அதை மழைக்காலத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டும் என்றனர்.
மேலும் கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவரை ஊராட்சி செயலர் காலால் உதைத்ததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
50 சதவீத மானியத்தில்
நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். குளிர்காலம் தொடங்கி விட்டதால் அனைத்து அலுவலகங்களிலும், கூட்டம் கூடும் இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்று சேருவதில்லை. அரசியல் தலையீட்டால் ஒரு சில விவசாயிகளே அனுபவித்து வருகின்றனர்.
பயிர்களுக்கு முக்கிய அடி உரமாக பயன்படும் யூரியா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் உரக்கடைகளில் ரூ.600-க்கு விற்பனை செய்கின்றனர். ஆகவே அதிகாரிகள் தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து, யூரியாவை பதுக்கி வைத்துள்ளார்களா என கண்டறிய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.