பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் போராட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் வாழ்ந்த பிரமாண்ட அரண்மனை உள்ளது. ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரையுடன் காணப்படும் பழமையான இந்த அரண்மனையின் ஒவ்வொரு அறைகளும் பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாக மரத்திலான சிற்பங்கள், பளிங்கு கல்லை போன்று பளபளக்கும் குளிர்ச்சியான தரை என பல்வேறு அம்சங்கள் இங்கு உள்ளது. இதனை காண்பதற்காக தினம்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த அரண்மனைக்கு திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். அதன்படி, நேற்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இன்று காலை ஏராளமானோர் வாகனங்களில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தபோதிலும் அரண்மனை நுழைவு வாயில் திறக்கப்படவில்லை.
இதுபற்றி விசாரித்த போது, அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று காலை அரண்மனை கதவு திறக்கப்படவில்லை. இதனால் பத்மநாபபுரம் அரண்மனையை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.