வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெயிண்டர் பலி


வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெயிண்டர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2023 8:58 PM GMT (Updated: 5 Jun 2023 7:58 AM GMT)

வடசேரி பஸ் நிலையத்தில் அரசு பஸ் சக்கத்தில் சிக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வடசேரி பஸ் நிலையத்தில் அரசு பஸ் சக்கத்தில் சிக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.

வடசேரி பஸ் நிலையம்

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் நிலையத்தின் பின்பகுதி நுழைவு வாயில் வழியாக கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் உள்ளே வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலையில் பின் பகுதியில் உள்ள நுழைவு வாயில் முன்பு 2 பேர் மதுபோதையில் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனர்.

பின்னர் அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுவிட்டார். மற்றொருவர் போதையில் தள்ளாடியபடி நுழைவு வாயில் வழியாக பஸ் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

போதையில் வந்து கொண்டிருந்த நபர் திடீரென நிலை தடுமாறி பஸ்சின் முன்பு விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைபார்த்ததும் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் அங்கு கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பெயிண்டர்

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் நாகர்கோவில் ஓட்டுபுறத் தெருவை சேர்ந்த சுதர்சன் (வயது 51) என்பது தெரிய வந்தது. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுபோதை பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்தார். அப்போது இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலைந்து சென்றனர்.

அதன்பின்பு சுதர்சன் மதுபோதையில் பஸ் நிலையம் நோக்கி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்து அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story