பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை:  வாலிபருக்கு ஆயுள் தண்டனை  கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

கடலூர் அருகே பெயிண்டரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பாரதிதாசன் (வயது 30), பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (55) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 20.8.2012 அன்று இரவு 8 மணி அளவில் பாரதிதாசனின் தம்பி பாண்டியராஜ், அதே பகுதியில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மணிவண்ணனின் உறவினரான சங்கர் மகன்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (33), குசான் என்கிற ஆசைத்தம்பி (30) ஆகியோர் முன்விரோதம் காரணமாக பாண்டியராஜை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுபற்றி அவர், தனது அண்ணன் பாரதிதாசனிடம் கூறியுள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

உடனே பாரதிதாசன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி மற்றும் அவர்களுடன் இருந்த மணிவண்ணன் ஆகியோரை தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாரதிதாசனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆயுள் தண்டனை

இதில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி சுபாஅன்புமணி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஆசைதம்பிக்கு ஓராண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மணிவண்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


Next Story