பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு போட்டிகள்
வனத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு போட்டிகளை வன அலுவலர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி-வினா, இலச்சினை (லோகோ) போட்டிகள் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.
உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன், வேலூர் வனச்சரக அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் நமது பங்கு ஆகிய தலைப்புகளில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் விரைவில் வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் வேலூர் மாவட்ட தீத்தடுப்பு காப்பாளர் ரமேஷ்குமார், வனவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.