ஓடும் ரெயிலில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
கோவை- மேட்டுப்பாளையம் இடையே ஓடும் ரெயிலில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
கோவை- மேட்டுப்பாளையம் இடையே ஓடும் ரெயிலில் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஓவியப்போட்டி
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் ரெயிலில் புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் "ஓடும் ெரயிலில் ஓவியம்" என்ற என்ற தலைப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும் ஓவியப் போட்டி தொடங்கியது. இதில் கோவையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 5 முதல் 7 -ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வர்ணம் தீட்டுதல், 8 -ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஏதேனும் ஒரு தலைப்பில் படம் வரைந்து வர்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது.
வித்தியாசமான அனுபவம்
ஓடும் ரெயிலில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக ஓவியம் வரைந்தனர். மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை சென்று அடைந்ததும் ஓவியப்போட்டி நிறைவடைந்தது. பின்னர் அதே ரெயிலில் மாணவ- மாணவிகள் கோவை வந்தனர். அப்போது அவர்கள் கைகளை தட்டி பாட்டுப்பாடியபடி மகிழ்ச்சியாக வந்தனர்.
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில் ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது என்றனர்.
சிந்தனைத்திறன்
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஓவியம் வரைவதால் மாணவர்களின் சிந்தனைத்்திறன், கற்பனைத்திறன் மேலோங்கும். அறிவாற்றல் கூர்மையாகும். ஓடும் ரெயிலில் ஓவியப் போட்டி மாணவ- மாணவிகளுக்கு புதுஅனுபவமாக அமைந்தது என்றனர்.
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.