விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா:மாட்டு வண்டி பந்தயம்


விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா:மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:45 PM GMT)

விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர். இதில் திருமணமான பெண்கள் மீனாட்சி அம்மனை வழிபட்டு புதுத் தாலி மாற்றிக் கொண்டனர். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

பூஞ்சிட்டு, நடுமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் விளாத்திகுளத்தில் இருந்து கரிசல்குளம் வரை 10 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடந்தது. பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்துதொடங்கி வைத்தார்.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான கண்டுகளித்தனர்.


Next Story