விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்
அலகுமலையில் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே அலகுமலையில் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை பல்வேறு அமைப்புகள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அன்னை தமிழை காக்க, ஆன்மிகத்தை வளர்ப்போம் என்ற கோஷத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் மற்றும் விசர்சனம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் செய்யும் பணி பொங்கலூரை அடுத்த அலகுமலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 அடி முதல் 11 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடைபெறுகிறது.
சிலைகள்
இதில் சிங்கத்தின் மேல் அமர்ந்த விநாயகர், பசு மாட்டின் மேல் அமர்ந்த விநாயகர், மயில் மற்றும் பறக்கும் ஆஞ்சநேயர் மேல் அமர்ந்துள்ள விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதை ஒட்டி வண்ணம் தீட்டும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவுற்று திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.