பாலக்காடு, திருச்சி ரெயில்கள் தாமதம்


பாலக்காடு, திருச்சி ரெயில்கள் தாமதம்
x

நெல்லை அருகே பாலம் கட்டும் பணியால் பாலக்காடு, திருச்சி ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

திருநெல்வேலி

நெல்லை அருகே பாலம் கட்டும் பணியால் பாலக்காடு, திருச்சி ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

பாலம் கட்டும் பணி

ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை -மதுரை வழித்தடத்தில் தாழையூத்து பகுதியில் உள்ள சிறிய பாலங்கள் அகற்றப்பட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

நேற்று காலையில் தொடங்கி மதியத்துக்குள் ஒரு பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் திட்டமிட்ட நேரத்தை விட பாலம் அமைக்கும் பணிக்கு கூடுதல் நேரம் ஆகி விட்டது.

ரெயில்கள் தாமதம்

இதையொட்டி நெல்லை வழியாக செல்லும் 2 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதாவது திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்புக்கு மதியம் 1.25 மணிக்கு வந்து 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் பாலம் கட்டுமான பணி முடிவடைய தாமதம் ஆனதால், இந்த ரெயில் 1.25 மணி நேரம் தாமதமாக 2.55 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏற்கனவே ரெயில் பாதை பராமரிப்பு பணிக்காக திருவனந்தபுரம் -நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இன்டர்சிட்டி ரெயில் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால் இந்த 2 ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story