பழனி நகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?


பழனி நகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?
x

பழனி நகராட்சி குப்பை கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திண்டுக்கல்

நகராட்சி குப்பைக்கிடங்கு

பழனி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தினமும் 40 டன் குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது.

பின்னர் அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து பெரியப்பாநகரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கு, 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதன் காரணமாக கிடங்கு பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

இடமாற்றம் செய்ய வேண்டும்

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக குப்பை கிடங்கில் குப்பைகள் தேக்கம் அடைவது குறைந்து வருகிறது. அதாவது குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து அவற்றின் மூலம் உரம் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

ஆனாலும் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் கிடங்கை ஒட்டிய பகுதிகளில் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரியப்பாநகர் பகுதி வழியாக குப்பைகள் கொண்டு செல்லும் லாரிகளை, விரிப்புகள் கொண்டு மூடப்படாததால் அவை சாலை பகுதியில் சிதறி விழுகின்றன.

எனவே குப்பைக்கிடங்கு செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

துர்நாற்றம்

பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ் (பெரியப்பாநகர்) : குப்பைகிடங்கை சுற்றிலும் பெரியப்பாநகர், சத்யாநகர், கோதைமங்கலம் என பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கை அகற்ற கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது குப்பைகளை அகற்றவும், சுற்றுச்சுவர் கட்டவும், தரைப்பகுதியில் சிமெண்டு தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது பெயரளவில் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. முழுமையான பணிகள் நடைபெறவில்லை. தற்போது குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது. எனினும் கிடங்கையொட்டி உள்ள பகுதி மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

நிலத்தடிநீர் மாசு

கணேசன் (பெரியப்பாநகர்) : கடந்த பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டது. அதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் குப்பைகள் பிரித்து உரமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரின் தரமும் எவ்வித மாற்றமும் அடையவில்லை. இந்நிலையில் விரைவில் நகர் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அவ்வாறு நகரை விரிவாக்கம் செய்தால், நகர் எல்லைக்குள் குப்பை கிடங்கு இருக்கும். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவதிப்பட நேரிடும். தற்போது கிடங்குக்கு குப்பைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் பெரியப்பாநகர் பிரதான சாலையில் செல்கிறது. சில நேரங்களில் லாரிகளில் உள்ள குப்பைகள் மூடப்படாமல் உள்ளதால் காற்றில் பறந்து கீழே விழுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி பகுதியில் தினமும் 40 டன்னும், விழா காலங்களில் 60 டன் வரையில் குப்பை சேகரமாகிறது. இதில் 30 டன் மக்கும் குப்பைகள் ஆகும். அவை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரத்யேக எந்திரம் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. பின்னர் அந்த உரம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. 15 டன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தனித்தனி பேல்களாக மாற்றப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் குப்பைக்கிடங்கு பகுதியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. குப்பை கிடங்கில் பழைய குப்பைகள் அனைத்தும் உரமாக மாற்றப்பட்டு வருகிறது. எனவே குப்பை கிடங்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story