பழனி முருகன் கோவில்: முடி காணிக்கை நிலையத்தில் இணைய சேவை பாதிப்பு - பக்தர்கள் அவதி
பழனி முருகன் கோவிலுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
பழனி,
பழனி முருகன் கோவிலுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சரவணப்பொய்கை மற்றும் மலையடிவாரத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மொட்டை அடிக்கக்கூடிய பக்தர்களுக்கு இணைய வழியில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுவதால் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இணைய சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் மொட்டை அடிக்க டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
மேலும் இணைய வழியில் டிக்கெட் வழங்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய இணைய சேவை பாதிப்பின் காரணமாக இது போன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணைய சேவை சரி செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் மொட்டை அடித்துச் சென்றனர்.