புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி


புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆரோக்கிய அன்னை பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டு உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயமாகும்.

வங்கக் கடலோரம் அமைந்து இருப்பது வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சமாகும். இதன் பிரம்மாண்ட கட்டிட வடிவமைப்பை காணவும், ஆரோக்கியமாதாவை வழிபடவும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி முதல் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

நேர்த்திக்கடன்

சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து கொண்ட ஏசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிள் பயணமாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

குருத்தோலை ஞாயிறு

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடலை பாடினார்கள்.

இதை நினைவு கூரும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

நாள் முழுவதும் திருப்பலி

அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயம் அருகே உள்ள மேல்கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் நேற்று காலை வேளாங்கண்ணி பேராலயம் மற்றம் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ், உதவி பங்கு தந்தையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story