மீன்பிடித்து கரை திரும்பிய பாம்பன் மீனவர்கள்


தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள். இதேேபால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

ராமநாதபுரம்

பாம்பன்,

ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள். இதேேபால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

மாண்டஸ் புயல்

வங்க கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயலால் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 400-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒவ்வொரு படகிலும் மாவுலா, விளை, கிளாத்தி, டியூப் கணவாய் உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்திருந்தன.

ஒரு வாரத்துக்கு பிறகு மீன் பிடிக்க சென்று வந்த நிலையிலும் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், 1 வாரமாக வெறிச் சோடி காணப்பட்ட பாம்பன் தெற்கு வாடி துறைமுகம் நேற்று மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.

ராமேசுவரம்

இதே போல் ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புவார்கள் என்று கூறப்படுகின்றது.


Next Story