வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பனவடலிசத்திரம் மாணவி 3-வது இடம்


வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பனவடலிசத்திரம் மாணவி 3-வது இடம்
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பனவடலிசத்திரம் மாணவி முத்துலட்சுமி 3-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசாமி. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள். இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி. சங்கரன்கோவிலில் உள்ள எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த இவர் 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவி முத்துலட்சுமி 3-வது இடத்தை பிடித்தார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், வகுப்பு ஆசிரியர் பார்வதி சிவகாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மாணவி முத்துலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தலைவன்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபாண்டியன், பஞ்சாயத்து தலைவர் வீரம்மாள், ஜெயக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story