20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி


20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி
x

20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால் 35 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கரூர்

பஞ்சப்பட்டி ஏரி

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1,217 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்டது பஞ்சப்பட்டி ஏரி. கடவூர் ஜமீன்தாரின் ஆளுகைக்குள் பட்டிருந்த கடவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து ஓடி வரும் காட்டாற்று வெள்ள நீரை சேமித்து வைக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது.

மழைக் காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீர் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரப்பிய பின் கடைசியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும்.

இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் தென்கரை வாய்க்காலில் சென்று திருச்சி மாவட்டத்தின் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்

பஞ்சப்பட்டி ஏரி மூலம் போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பக்காபட்டி, வயலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 2001-ம் ஆண்டு வரை மழைப்பொழிவு இருந்ததால் அப்பகுதி விவசாய நிலங்களில் ஏரியின் நீர் பயன்பாட்டில் இருந்து அப்பகுதியை செழிப்பாக்கியது. மேலும் இந்த ஏரியைச் சுற்றி ஒத்தபட்டி, கொட்டாம்பட்டி, வேலாயுதம் பாளையம், பஞ்சப்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட 75 கிராமங்களில் நெல், கரும்பு, வாழை என முப்போகம் விவசாயம் நடைபெற்றது. 2001-க்கு பிறகு போதிய மழை இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது.

இந்த ஏரிக்கு மாயனூர் கதவணையில் இருந்து நீர் கொண்டு வர விவசாயிகள் பல முயற்சிகள் எடுத்த போதிலும் ஈடேறவில்லை.பஞ்சப்பட்டி ஏரிக்கு 1962-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நாமக்கல் மாவட்டம் ஜோ டார்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பாசன வசதி கிடைக்கும்

மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு மழை காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வந்து விட்டால் விவசாயம் செழிப்படையும். பஞ்சப்பட்டி, காரைக்குடி, கரட்டுப்பட்டி, கொடிகம்பத்தூர், சுக்காம்பட்டி, அழகாபுரி, ரெங்காபாளையம், ஒத்தப்பட்டி, மலைப்பட்டி, வேலாயுதம்பாளையம், மாணிக்கப்புரம், கொட்டாம்பட்டி மற்றும் குளித்தலை வரையிலான கிராமங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். அதே போல் ஜோடார்பாளையத்திலிருந்து வெள்ளியணை வழியாக காவிரி நீரை வாய்க்கால் வெட்டி பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வர முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் காலத்தில் சர்வே செய்யப்பட்டது .அதன்படி வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டுவர ஆவண செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கிடைப்பதோடு விவசாயமும் செழிக்கும். குடிநீர் பிரச்சினையும் தீரும். பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரப்ப கரூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் பலர் தொடர் முயற்சி செய்து வருகின்றனர். மாயனூர் கதவணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோரிக்கை

மாயனூர் கதவணையில் இருந்து ஏரி 27.4 மீ. உயரத்தில் மேடான பகுதியில் இருப்பதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் மாயனூர் கதவணையில் இருந்து தான் கொண்டு வர முடியவில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஜோடார்பாளையத்தில் இருந்து பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தலாம்.

பஞ்சப்பட்டி ஏரியில் நீர் நிரப்பப்பட்டால் 15 ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினை தீரும். 20 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துள்ளதால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்கள் பட்டு போய்விட்டன. ஏரியை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து விட்டன. மாயனூர் கதவணை வழியாக காவிரிநீர் சென்றும் அருகில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி வறண்டு கிடக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் காவிரியில் உபரிநீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இனியாவது மாவட்ட நிர்வாகம் ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வாரி, ஜோடார்பாளையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story