ஊராட்சி மன்ற தலைவர்கள்-அதிகாரிகள் பங்கேற்பு: குழந்தை திருமணம் தடுப்பது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள்-அதிகாரிகள் பங்கேற்பு: குழந்தை திருமணம் தடுப்பது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட அதிகாரிகளுடன் நடந்தது.

திருவள்ளூர்

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கைகளை மேற்கொள்ள...

குழந்தை திருமணத்தால் மனநல பாதிப்பு, அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இவற்றை ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பகுதியில் முழுமையாக எடுத்துரைத்து, தொடர்ந்து, இதுபோன்ற குழந்தை திருமணம் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, குழந்தை திருமணத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளம்பரப்படுத்துதல், கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுதல், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து கையெழுத்து இயக்கம் நடத்துதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்களது பகுதியில் மேற்கொண்டு குழந்தை திருமணம் இல்லாத ஊராட்சியாக திகழ செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பேசினார்.

விழிப்புணர்வு பதாகை வெளியீடு

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகையை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். இதில், மூத்த உரிமையியல் நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாண்டில்யன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் நல குழும தலைவர் மேரி அக்சல்யா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story