தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி தலைவரின்கார் கண்ணாடிகள் உடைப்பு

பொறையாறு அருகே தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொட
பொறையாறு:
பொறையாறு அருகே தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊராட்சி தலைவர்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பைலட். தி.மு.க.வை சேர்ந்தவரான இவர் எடுத்துக்கட்டி கிராமத்தில் தனது வீட்டு வாசல் அருகே காரை நிறுத்தி விட்டு, அவரின் சொந்த ஊரான அருகில் உள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சென்றார்.
கார் கண்ணாடிகள் உடைப்பு
நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு வாசல் அருகே நிறுத்தி இருந்த அவரது கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் காரில் இருந்த ஏ.சி. பேன், ரேடியோ செட் உள்ளிட்ட சில பொருட்களும் திருடப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் ெசய்தார். புகாரின் பேரில் பொறையாறு போலீசார், பைலட்டின் கார் கண்ணாடிகளை உடைத்தவர்கள் யார்? எதற்காக அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊராட்சி தலைவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






